ஒரு நபர் சார்பாக அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், ஏதேனும் ஒரு பணியை நிறைவேற்றுவதற்கும், ஒரு செயலைச் செய்வதற்கும் அல்லது ஏதேனும் வர்த்தகம் அல்லது வணிகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அத்தகைய நபரினால் மற்றொரு நபருக்கு அதிகாரம் வழங்குவதற்காக அட்டோர்னி அதிகாரப் பத்திரமொன்றைப் பதிவு செய்துகொள்ள முடியும். இலங்கைக்குள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டில் கையொப்பமிடப்பட்ட ஒவ்வொரு அட்டோர்னி அதிகாரப் பத்திரமும் இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இலங்கையில் எழுதி கையொப்பமிடப்பட்டதாயின் கையொப்பமிட்ட திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள்ளும், இலங்கைக்கு வெளியே எழுதி கையொப்பமிடப்பட்டதாயின் கையொப்பமிட்ட திகதியிலிருந்து 03 மாத காலத்திற்குள்ளும் பதிவுக்காக இத்திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
1902 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க அட்டோர்னி அதிகாரப் பத்திரக் கட்டளைச் சட்டத்தின்படி எழுதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அட்டோர்னி அதிகாரப் பத்திரங்களை, அட்டோர்னி அதிகாரம் பெற்றவரின் வசிப்பிட முகவரியைக் கருத்திற் கொள்ளாமல், ஏதேனும் ஒரு வலய அலுவலகத்திலோ அல்லது மாவட்ட உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகத்திலோ பதிவுக்காகச் சமர்ப்பிக்க முடியும்.
2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அட்டோர்னி அதிகாரப் பத்திரத் திருத்தச் சட்டத்தின்படி, இலங்கைக்குள் எழுதி கையொப்பமிடும் போது இரண்டு சாட்சிகள் முன்னிலையில் ஒரு பகிரங்க நொத்தாரிசுவினால் எழுதி அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கைக்கு வெளியே எழுதி கையொப்பமிடும் போது இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும் ஒரு தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் அல்லது இராஜதந்திர உத்தியோகத்தர் அல்லது தூதரக உத்தியோகத்தர் அல்லது அந்த நாட்டுச் சட்டத்தின்படி அட்டோர்னி அதிகாரப் பத்திரமொன்றை எழுதி அத்தாட்சிப்படுத்த அதிகாரமளிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நபர் முன்னிலையிலும் எழுதி கையொப்பமிடப்பட வேண்டும்.
பதிவுக்காகச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- அட்டோர்னி அதிகாரப் பத்திரத்தின் மூலப் பிரதி.
- பகிரங்க நொத்தாரிசு ஒருவரினால் உண்மைப் பிரதி என அத்தாட்சிப்படுத்தப்பட்ட அட்டோர்னி அதிகாரப் பத்திரத்தின் ஒரு பிரதி.
- 2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அட்டோர்னி அதிகாரப் பத்திர (திருத்தச்) சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறான சத்தியக் கடதாசி.
- அட்டோர்னி அதிகாரப் பத்திரத்தை வழங்குபவர் மற்றும் அதனைப் பெறுபவர் ஆகியோரின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் நொத்தாரிசுவினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி.
- வெளிநாட்டில் எழுதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட அட்டோர்னி அதிகாரப் பத்திரமாயின், அதனை வழங்குபவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட (கையொப்பமிடப்பட்ட) அவரது கடவுச்சீட்டின் தரவுப் பக்கத்தின் ஒரு பிரதி.