Accessibility Tools

Information Icon

சிவில் பதிவுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை கணினி தரவுக்கட்டமைப்பில் (e-Population Register) உட்படுத்தி, அதன் மூலம் கவர்ச்சிகரமான, துல்லியமான மற்றும் அங்கீகாரம்மிக்க, விரைவான துலங்கல் குறியீட்டைக் (QR Code) கொண்ட அச்சிடப்பட்ட சான்றிதழ் ஒன்றை வழங்குதல்.

அறிமுகம்

  • பிறப்புக்கள், திருமணங்கள் மற்றும் மரணங்களைப் பதிவு செய்வதற்குப் பதிவாளர் நாயகம் திணைக்களம் பொறுப்பாகும். அவ்வாறு உட்படுத்தப்படும் பதிவுகள் கைமுறையாகப் பராமரிக்கப்படுவதுடன், ஏனைய அரசாங்க நிறுவனங்கள் அவற்றை அணுகுவதற்கு வசதிகள் வழங்கப்படுவதில்லை. இதன் விளைவாக முயற்சி, நேரம் மற்றும் செலவு என்பன இருமடங்காக விரயமாகின்றன.
  • இலங்கையின் ஒவ்வொரு பிரஜையையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அடிப்படைத் தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குதல், முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கான வினைத்திறனான மற்றும் நம்பகமான முறைமையொன்றை ஏற்படுத்துதல், சனத்தொகை பதிவேட்டைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வை மேம்படுத்துதல், சனத்தொகை மற்றும் சுகாதாரப் புள்ளிவிபரங்கள் தொடர்பான விரிவான பகுப்பாய்வுத் திறன்களை வழங்குதல், முக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிக்கையிடல் எல்லையை விரிவுபடுத்துதல் மற்றும் பிறப்பின் போதே அனைத்துப் பிரஜைகளுக்கும் தனிநபர் அடையாள எண்ணொன்றை (PIN) வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் 'ஈ-சனத்தொகை' (e-Population) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம், 'ஈ-சனத்தொகை' (e-Population) கட்டமைப்பு, பெற்றோர் தொடர்பான சரிபார்ப்பினூடாகத் தரவுகளின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் சான்றிதழ் பிரதிகளைத் தேடுவதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் வசதிகளை வழங்குகிறது. மேலும், இது மொழிபெயர்ப்புகளின் அவசியத்தைக் குறைப்பதுடன், பிரஜைகளின் தற்போதைய தகவல்களைப் பேணுவதற்கும் நிறுவனங்களுக்கு இடையில் பிரஜைகளின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிவகுக்கிறது.

இ- சனத்தொகை திட்டம்

1951 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கப் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் ஏற்பாடுகள், பிறப்பு அல்லது இறப்பை மனித வலுவினால் கைப்படப் பதிவு செய்வதற்காகவே (Manual Registration) உத்தேசிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், அவ்வாறு கைப்பட எழுதப்பட்ட பல பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் கையெழுத்துப் பிழைகள் மற்றும் எழுதுவினைஞர் பிழைகள் (Clerical errors) அடிக்கடி காணப்படுகின்றன. மேலும், ஒரு பிறப்புச் சான்றிதழில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், அத்திருத்தம் சான்றிதழில் வெளிப்படையாகத் தெரிவது (Visibility of amendments), சான்றிதழ் வைத்திருப்பவருக்கு பெரும்பாலும் ஒரு மனவேதனை அளிக்கும் அல்லது கவலைக்குரிய அனுபவமாக அமைகின்றது.

அதேபோல், பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவுத் தகவல்கள் ஒரு தரவுத் தொகுதியில் (Database) பதிவு செய்யப்படாத காரணத்தினால், அத்தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது கணிசமான நேரமும் முயற்சியும் செலவிடப்பட வேண்டியுள்ளதுடன், அத்தகைய தகவல்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கும் அது தடையாக அமைந்துள்ளது.

இந்தக் காரணிகளைக் கருத்திற் கொண்டு, அரச துறை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தொழில்நுட்ப வழிகாட்டலுடன், சிவில் பதிவுத் தகவல்கள் மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய ஒரு தரவுத் தொகுதியை (Database) உருவாக்குவதற்காகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் "இ-மக்கள் தொகை இடாப்பு" (e-Population Register) திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

செயற்படுத்தப்படும் முறை

பிறப்பு ஒன்றைப் பதிவு செய்யும் போது, பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பிரகடனப் பத்திரத்திலுள்ள தகவல்கள் பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்களால் ஈ-சனத்தொகை பதிவேட்டு முறைமையில் உள்ளீடு செய்யப்படுகின்றன. அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுப் பத்திரம் ) பெற்றோரிடம் அனுப்பி உறுதிப்படுத்தப்படும். அதன் பின்னர், தரவுக்கட்டமைப்பின் ஊடாக நபரின் இலங்கை அடையாள எண் / 'எனது எண்' உள்ளடங்கிய தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படும். இந்த இலங்கை அடையாள எண் / 'எனது எண்' ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும். இந்தத் தரவுக்கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ள தேசிய பிறப்புச் சான்றிதழில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • ஒவ்வொரு பிறப்புக்கும் "எனது எண்” எனும் பெயரில் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இது ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து உருவாக்கப்படுவதால், எதிர்காலத்தில் இந்த எண்ணையே தேசிய அடையாள அட்டை எண்ணாகவும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • இந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வழங்கப்படுவதால், இது தேசிய பிறப்புச் சான்றிதழ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இப்பிறப்புச் சான்றிதழ் சிங்களம்/ஆங்கிலம் அல்லது தமிழ்/ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்கப்படுவதால், இதனைச் சர்வதேச ரீதியில் பயன்படுத்த முடிதல்.
  • சான்றிதழில் விரைவான துலங்கல் குறியீடு (QR Code) உள்ளடக்கப்பட்டுள்ளதால், போலித் தகவல்களை உட்படுத்துவது அல்லது தரவுகளைச் சிதைப்பது தடுக்கப்படும்.
  • விசேட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட தாளில் அச்சிடப்படுவதால் இதற்கு அதிக அங்கீகாரம் கிடைத்தல்.


இதற்கமைய, உத்தியோகபூர்வமாகச் சான்றளிக்கப்பட்ட மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட பிரஜைகளின் தகவல் கட்டமைப்பைப் பேணுவதன் மூலம், இலங்கையர்கள் தொடர்பான சனத்தொகை பதிவேடு ஒன்று உருவாக்கப்படும். இத்தகவல்களை அரச நிறுவனங்களுக்கிடையில் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதால், அதன் மூலம் அரசுத் துறையின் வினைத்திறன் மேம்படும்.